கல்வி என்பது மூளைக்குள் திணிக்கப்படும் ஒரு கருவி அல்ல. சிறந்த பண்புகளை உருவாக்குகின்ற மனவலிமையை வளர்க்கின்ற, அறிவை விரியச் செய்கின்ற, பண்பை மேம்படுத்துகின்ற கல்வியே உண்மையான கல்வி.
ஆன்லைன் கல்வி அனைவருக்கும் சாத்தியமானதா? என்பதனை முதலில் யோசிக்க வேண்டும். என்றாலும், பிள்ளைகள் தங்கள் நேரத்தை பயனுள்ளதாக இருக்கும் வகையில் செலவிடவேண்டும் என்பதற்கான மாற்று வழியாக இருக்கிறது. ஆகையால், இன்றைய ஆன்லைன் கல்விவேறு வழியின்றி அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.
குழந்தைகளிடம் எப்பொழுதும் கையில் போனை வைத்துக் கொண்டிராதே என்று கூறும் பெற்றோரே, இன்று குழந்தைகளிடம், பள்ளியிலிருந்து என்ன? ஆன்லைன் பாட அட்டவணை (timetable) வந்துள்ளது, வீட்டுப்பாடம் (Homework) எதுவும் அனுப்பியுள்ளார்களா? என்று பார்க்கச் சொல்லி கட்டாயப் படுத்தி கையில் போனைக் கொடுக்கும் சூழலுக்கு தள்ளப்படுகிறார்கள்.
பெற்றவர்களுக்கு குழந்தைகள் தங்கள் கண்முன் கற்கிறார்கள் என்று மனதிற்குள் நினைத்துக் கொள்கிறார்கள். ஆனால் மாணவர்களுக்கு தாங்கள் என்ன செய்கிறார்கள் என்பதனை பெற்றவர்கள் கண்காணிப்பதனை விரும்புவதில்லை.
ஆசிரியர்கள் நடத்தும் பாடங்களை சிலநேரங்களில், சில பெற்றோரும் மாணவர்களுடன் கவனிப்பதனால், ஆசிரியர் நடத்தும் பாடங்களில் குறுக்கீடு செய்யும் வாய்ப்புகள் இருப்பதனால், ஆசிரியர் பணியில் மேலும் ஒரு சிக்களைச் சந்திக்க வேண்டிய சூழலில் தள்ளப்படுகின்றனர். ஆசிரியர்கள் மாணவர்களுக்காக மட்டுமின்றி, பெற்றோருக்காகவும் யோசித்து நடத்தப் போகும் பாடங்களை தயார் செய்யும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.
எல்லாவற்றிற்கும் மேலாக அனைத்து மாணவர்களும் ஆன்லைனில் கல்வி கற்கும் வசதியும், வாய்ப்பும் பெற்றிருப்பார்களா? என்பது கேள்விக்குறியது.
ஆசிரியர் மற்றும் மாணவர்கள் இருவருடைய மனநிலையை ஒருவருக்கு ஒருவர் அறிந்துகொள்ள இயலாது என்பதனால், கற்றலும், கற்பித்தலும் ஆன்லைன் கல்வியில் சீராக இருக்கும் என்று கூறமுடியாது.
ஆன்லைன் கல்வியில் மாணவர்களுக்கான மிகப்பெரிய தடையாக கருதும் கலந்துரையாடல். ஆசிரியர் கூறும் கருத்துக்களை, ஏற்றலோ, மறுத்தலோ செய்வதனால் தங்கள் சந்தேகத்தைக் போக்கிக் கொள்ள ஆன்லைனில் இயலாது. உயர் மட்ட சிந்தனைக்கு வழிவகுக்கும் வகுப்பறை விவாதம் மற்றும் உரையாடல் ஆன்லைன் மூலம் பங்கேற்கற்பது தடைப்பட வாய்ப்புகள் அதிகம். அத்தோடு எல்லாரும் ஒரே நேரத்தில், ஆன்லைனில் பங்கேற்பது இயலாத ஒன்று.
கிராமத்தில் உள்ள மாணவர்களுக்கு இன்டர்நெட் வசதி இருக்குமா என்பது சந்தேகம், அப்படியே இருந்தாலும், இன்டர்நெட் சரியாக கிடைக்குமா? என்பது அடுத்த கேள்விக்குறி.
ஆன்லைன் கல்வியால் சில நன்மைகள் இருந்தாலும், பள்ளி கல்வியிலேயே நிறைய விஷயங்களை யோசிக்க வேண்டும் என்றே கூறலாம். ஏனெனில், மனிதர்கள் நேருக்கு நேராக பார்க்கும் போது தான் முழுமையான ஆளுமையை உணரவோ, வளர்க்கவோ முடியும்.
மேலும் விட்டுக்கொடுத்தல், பிறருடன் இணங்கிப் (அட்ஜஸ்ட்மென்ட்) போதல், தோல்வியை எதிர் கொள்ளல், மீண்டும் முயல்தல், தலைமைப் பண்பு போன்ற பல ஆளுமைப் பண்புகளை வளர்ப்பதில் பள்ளி கல்விக்கே பெரும் பங்கு. மேலும் உடற்பயிற்சிக்கு வேலையே இல்லாததால் மனஅழுத்தம் போன்ற மனநோயில் தள்ளப்படலாம்.
இறுதியாக தொழிநுட்பம் வளர வளர, மனஅழுத்தம் (Stress), மனச்சோர்வு (Depression), பதற்றம் (Tension), பீதி (Panic) போன்ற பல மனநோய் அறிகுறிகளும் வர வாய்ப்பாக அமைகிறது. ஆன்லைன் கல்வி தொழிநுட்பத்தை ஓரளவிற்கு பயன்படுத்தினால், வருங்காலத்தில் முழுமையான தலைமைப் பண்பு வாய்ந்த மாணவச் செல்வங்களை உருவாக்க முடியும்
வேதகாலக் கல்வி (கி.மு. 2500-1000), குருகுலக்கல்வி (கி.மு. 900-500), பெளத்தக் கல்வி (கி.மு.600) எனத் தொடங்கி இன்றைய பள்ளிக்கல்வியை அடுத்து வீட்டிலிருந்தே கற்கும் ஆன்லைன் கல்வியாக வளர்ந்துள்ளது. என்றாலும், ஆன்லைன் கல்வி தொற்று காலத்திற்கு மட்டுமானதே தவிர, நிரந்தரமானதல்ல. வரும் காலங்களில் ஆன்லைன்கல்வியும் இடம்பெறும் ஒழிய பள்ளிக்கல்விக்கு மாற்றாக இருக்க முடியாது..