இளமையிலே தகதகவென்று மின்னும் கோடி சூரியப் பிரகாசத்துடன் நமது குழந்தைகள் சொலிக்க வேண்டும். அப்படி சொலித்தால், அவர்கள் முதுமையில் முதுமையிலும் மின்னுவார்கள். உலகத்தார் அவர்களை மதிப்பார்கள், பின்சந்ததியர் போற்றுவார்கள்.
பாரதியார், “இளமையிற்கல்” என்று படித்த சிறுவனின் வார்த்தைக்கு. ‘முதுமையில் மண்” என்று கூறினார்.
“பாரதியார் ஏன் அவ்விதம் சொன்னார்? என்பதற்கு அவரேவிளக்கமும் அளிக்கிறார். “இளமையிற் கல்” என்று சென்னார்கள், இளமையிலே கல்லாதிருப்பவன் முதுமையில் கவனிப்பார் அற்ற மண்ணாவது நிச்சயம். ஆகையால் இளமையில் நல்ல கல்வி அளிப்பது அவசியம் என்கிறார்.
இளமைப் பருவம் என்பது தொல்லைகள் இல்லாமல் துள்ளித் திரியும் காலம். இந்தக் காலத்தில் கற்கின்ற கல்வியானது அவனது வாழ்க்கை முழுவதும் உதவும் வகையில் உள்ளத்தில் ஆழ்ந்து பதியும். இளமையில் கற்காமல் மனம்போன போக்கில் வாழ்கிறவர்கள் முதுமையில் துன்பப்பட நேரிடும் என்பதனையே பாரதி கூறுகிறார்.
மனிதனின் வாழ்வில் பல பருவங்களில் இளமைப் பருவம் வாழ்வின் தொடக்கம். இப்பருவத்தில் தான் வாழ்வில் பல திருப்பங்களை ஏற்படுத்தும் இயல்பை உடையன. இளம்பருவத்தில் சாதனையாளர்களாக விளங்குவபவர்கள் முதுமைப் பருவத்திலும் பல சாதனைகள் புரிந்துள்ளனர்.
உலகில் உள்ள அனைத்து உயிர்களும் விரும்பும் பருவம், இந்த இளமைப் பருவமே. இளங்குழவிப் பருவம், குழந்தைப் பருவம், வளரிழம் பருவம் (குமரப் பருவம்) எனப் பருவங்களில், இவ்விளமைப் பருவம் மட்டுமே மனிதனி்ன் மனதில் பல மாற்றங்களுக்கு வழி வகுக்கும் மகிழ்ச்சி நிறைந்த பருவமாகும்.
உடலும், உள்ளமும் விரைந்து செயல்படக் கூடிய பருவமும் இது என்பது குறிப்பிடத்தக்கது.
குழந்தைகள் தங்களின் ஐந்து வயதை அடைவதற்குள் 90% அளவுக்கு மூளை வளர்ச்சி பெற்றுவிடும் என ஆய்வார்கள் தெரிவிக்கின்றனர். இந்த வயதில் குழந்தைகளுக்கு மூளைக்கான பயிற்சிகளைக் கொடுத்து குழந்தையை ஊக்கப்படுத்த வேண்டும். வெறும் படிப்பு மட்டுமே குழந்தைகளுக்கு போதாது. இன்னும் நிறைய நல்ல விஷயங்களைக் குழந்தைகள் தெரிந்து கொள்ள வேண்டும்.
குழந்தைகளால் 3-5 வயதுக்குள்ளேயே 2-3 மொழிகளைக் கற்கும் திறன் இருக்கும். தமிழ், ஆங்கிலம் என இரண்டு மொழிகளை வீட்டில் பேசினால், இரண்டையுமே கற்று கொள்ளும் ஆற்றல் குழந்தைகளுக்கு உண்டு. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி, ஆங்கிலம் என எந்த மொழியையும் சுலபமாக குழந்தைகளால் கற்க முடியும்.
ஐந்து வயதிற்குள் ஒரு குழந்தை பெரும் அறிவு வளர்ச்சியே அதன் அந்த குழந்தையின் இளமைப் பருவ ஆளுமையைத் தீர்மானிக்கிறது என்கின்றனர் உளவியலாளர்கள். ஆளுமை வளர்ச்சி பிள்ளைகள் எப்படி வளர்க்கப்படுகிறார்களோ அவ்வாறு ஆளுமைத் திறன்களும் இருக்கும். தனிப்பட்ட நபர்கள் மற்றும் பெற்றோருக்குரிய ஆளுமை, பராமரிப்பாளர்களின் சார்நிலைகள் மற்றும் பல்வேறு கலாச்சாரங்களின் நெறிகள் மற்றும் எதிர்பார்ப்புகள் ஆகியவற்றை சார்ந்தும் இருக்கலாம். ஆளுமை வளர்ச்சி மற்றும் வெளிப்பாடுகளில், சுற்றுச்சூழல் காரணிகள் பெற்றோர் மற்றும் கலாச்சாரம் போன்ற விஷயங்கள் உள்ளன. ஆளுமையைத்தான் நாம் Personality என்கிறோம்.
ஜீன் பியாஜெட் போன்ற உளவியலாளர்கள் பெரியவர்கள் விட வித்தியாசமாக சிந்திக்கிறார்கள் என்றும், குழந்தை பருவம் மற்றும் பருவ வயது வளர்ச்சியையும் ஒரு தனித்துவம் மிக்க காலமாகமாகும் என்கின்றார்கள்.
இளமையில் கற்கும் கல்வி அடிப்படையானது. இளமையில் கற்பது அனைத்திற்கும் அஸ்திவாரம் போன்றதாகும். இளம் வயதில்தான் அனைத்தையும் கற்றுக் கொள்ள முடியும். பச்சை மரத்தில் ஆணி அடித்தால் எங்ஙனம் அதிவேகமாக இறங்குமோ அதுபோன்று இளம் வயதில் விரைவில் அனைத்தையும் கற்கலாம். மனமானது எதனையும் உள்வாங்கிக் கொள்ளும் பக்குவம் வாய்ந்தது இளமைக் காலம். இதனைக் கருத்தில் கொண்டே நமது முன்னோர்கள் ‘‘இளமையில் கல்” என்ற பழமொழி வாயிலாகக் கூறியுள்ளனர்.
அத்தோடு பல அரிய கருத்துக்களையும் பழமொழிகள் வாயிலாக நம் முன்னோர்கள் கூறியுள்ளனர். “இன்றைய இளைஞர்கள் நாளைய தலைவர்கள்”. ‘‘மூத்தது மோளை இளையது காளை” என்ற பழமொழி, வயதில் மூத்தோர் சற்று யோசித்து நிதானமாகச் செயல்படுவர். இளையோர் எந்தச் செயலிலும் விரைந்து காளை வேகமாக ஓடுவது போன்று செயல்படுவர் என்பதை மேற்குறிப்பிட்ட பழமொழி தெளிவுறுத்துகிறது.
இளமை சிறிது சிறிதாகத் தேய்ந்து, ஒருநாள் முற்றிலுமாக நீங்க, முதுமை வந்து சூழ்ந்து கொள்கிறது. இவ்வாறு முதுமை வந்தபின், செய்து முடிக்க வேண்டிய பல நல்ல செயல்களைச் செய்ய இயலாமல் போகும். ஆகையால், உடலில் இளமையும் வலிவும் இருக்கும்போதே செய்துவிட வேண்டும்.
வருமுன்னர் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர் வைத்தூறு போலக்கெடும்’ எனத் திருக்குறள் விடுக்கும் எச்சரிக்கையும் இதுவே.
இந்த இளமைக் காலத்தில்தான், மனம் பலவிதங்களிலும் அலைபாய்கிறது. படிப்பிலும் சரி, பல்விதக் கலைகளிலும் சரி, உலக அனுபவங்களிலும் சரி, எத்தனையோ விஷயங்கள் கொட்டிக்கிடக்கின்றன. எதைப் பின்பற்றுவது என யோசித்து முடிவெடுப்பதற்குள், காலம் போய்விடுகிறது. வந்தவற்றில் தோ்வு செய்து ஒதுக்கிய நாம், கடைசியில் கிடைத்ததை ஏற்கும் மனநிலைக்குத் தள்ளப்படுகிறோம். அவ்வாறில்லாமல் இளமைப் பருவத்தை முழுமையாக கற்பதற்கு பயன்படுத்திக் கொண்டால், முதுமை இனிமையாக அமையும்.
கோவிலில் இருந்து உலா வரும் பல்லக்கை அனைவரும் பார்த்திருப்போம். இதற்கான வளைந்த மூங்கில் எங்கே விளைகிறது? எங்கேயும் விளையாது. மூங்கில் வளரும் காலத்திலேயே அதைப் பல்லக்குக்குத் தேவைப்படும் மாதிரியில் வளைத்து வளரவிடுவார்கள். அது முற்றிய பின்னர் அதைப் பல்லக்குக்குப் பயன்படுத்துவர். இதைத்தான் ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது என்று கூறுகிறோம்.
5 அல்லது 6 டன் எடை உடைய ஒரு யானை சுமார் 80 கிலோ எடை உடைய வித்தைகாரன் முதுகில் நிற்பதைப் பார்த்து எல்லோரும் வியந்தார்கள். அவன் படுத்தவுடன் அவன் மீது ஒரு பெரிய பலகையை வைப்பார்கள். அதன் மீது யானை ஏறி நிற்கும். இதைப் பார்த்த ஒரு பத்திரிகையாளர் அவரரிடம், ‘நீங்கள் யோகாசனம் பயின்று ஏதேனும் அபூர்வ சக்தி பெற்றிருக்கிறீர்களா? எப்படி இதைச் செய்ய முடிகிறது? என்று கேட்டார். அதற்கு அந்த இளைஞர், நான் பள்ளிக்கூடம் கூட போனது இல்லை, எனக்கு யோகமும் தெரியாது, ஆசனமும் தெரியாது. இந்த யானை குட்டியாக இருக்கும் விலைக்கு வித்தைக்காக வாங்கியது. அன்று முதல் என் மீது ஏறி நிற்கும் பயிற்சியைத் துவக்கினார்கள். அது சிறிது சிறிதாக வளர்ந்து பெரிதானபோதும் எனக்கு பாரம் தெரிவதில்லை என்றார்.
இது நம் வாழ்க்கையில் பெரிய உண்மையைப் போதிக்கிறது. பல்லக்கு மூங்கில் போல வளையவும், பெரிய பாரத்தைச் சுமக்கவும் இளமை முதல் பயிற்சி தேவை.