உளவியல் என்பது எல்லா வாழும் உயிரினங்களின் நடத்தையைப் பற்றி அறியும் நமது முயற்சி. குறிப்பாகத் தம்மை தாமே அறியும் தனிப்பட்ட தேடுதல். தமது உணர்வுகள், எண்ணங்கள், செய்யும் செயல்களுடன் தொடர்புடையது உளவியல். இது நடத்தையைப் பற்றிய அறிவியல். நடத்தையின் வகைகளைப் பற்றி ஆய்வது.
தன்னளவில் முரண்பாடுகள் அற்ற ஒத்திசைவும் சமூக அளவில் நல்லுறவான இணக்கமும் உளநலத்தின் இருபெரும் கூறுகள். இவற்றில் ஏதேனுமொன்றில் குறைவு ஏற்பட்டாலும் உள்ள முறிவு, உள்ளப் போராட்டம், உள்ள இறுக்கம் ஆகிய உணர்வுநிலைகள் ஏற்படுகின்றன.
முழுக்க முழுக்கத் தன்னுணர்ச்சிப் பாடல்களாக மட்டுமே அமைந்துள்ள நமது தொல் இலக்கியங்களான சங்க இலக்கியங்களில் இத்தகு உணர்வு நிலைகளைப் பரவலாகக் காண முடியும்.
உளவியல் இன்று ஒரு பெரும் அறிவத் துறையாக வளர்ச்சி கண்டுள்ளது. இத்துறையானது பத்தொன்பதாம் நூற்றாண்டுக்குப் பின்னர்தான் பிரசித்தம் பெற்றது. எனினும் உளவியல்சார் சிந்தனைகள் சங்கத் தமிழரிடையே நிலைபெற்று இருந்துள்ளமையைப் பழந்தமிழ்ச் செய்யுட்களைப் பயில்வதன் மூலம் அறியலாம். மேலும், இந்த ஆய்வின் மூலங்களில் முதல்நிலைத் தரவுகளாக நற்றிணை காணப்படுவதுடன், இவ் ஆய்வானது உணர்வு, சமூக மதிப்பிடுகள், மற்றும் அறிவு நிலை வெளிப்பாட்டில் எத்தகைய உளவியல் சிந்தனை பழந்தமிழரிடத்தே இருந்துள்ளது என்பதனை ஆராய்கின்றது.
ஒட்டு மொத்த சமுதாயத்திலே மனித மன ஆற்றுப்படுத்தலின் தேவைக்கும், தன்மைக்கும் மொழி என்னும் ஊடகத்தின் தேவை முக்கியமானதாகும். அதில் மரபுத் தொடர்களும், கண்டனங்களும் மறைமுகமாகவும், நேரடியாகவும், இன்றியமையாததாகவும் அமைகின்றன.
தனித்தனி மனிதர்களின் கூட்டு வடிவமான சமூகம், அதன் உறுப்பினர்களான ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையிலும் நடைமுறைகளிலும் சிறப்பான செல்வாக்கை செலுத்துகின்றது.
அவ்வாறான வாய்ப்புக்களையும், இருப்புக்களையும் உரிய வகையில் பயன்படுத்தியோரும், தவறாக பயன்படுத்தியோரும் பெறும் பயன்கள் ஒன்றிலிருந்து ஒன்று வேறுபடுகின்றன. இவ்வாறு இரு நிலைப்பட்ட பன்முக மனிதத் தன்மைகளின் இடையே காணப்படுகின்ற உணர்வுகள் யாவும் ஒத்த தன்மையைக் கொண்டவை. ஆயினும் வெளிப்படும் நியமங்களிலும், நேரங்களிலும் அவை வேறுபடுகின்றன.
தனி நபர் சுய உளநல ஆற்றுப்படுத்தலுக்கான மொழித் தேவையில் இவற்றின் பிரயோகம் மிக மிக அவசியம் என்பதை புரிந்தவர்கள் மிகச்சிலரே.
ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பு அகம், புறம் என்ற இரண்டினை அறிந்து அவை மக்கட்கு தேவை என்பதால் புலவர்கள் பாடல் இயற்றினர். கட்டற்ற களியாட்டத்திற்கு அல்ல. இல்லற இன்பம் குறைவற்றதாக இருத்தல் வேண்டும் என்பதற்காக. வாழ்க்கை ஒரு கலை, அதனை மக்கள் உய்த்து உணரவேண்டும் என்பதற்காகவே சங்கப்பாடல்கள் இயற்றப்பட்டன.
உளவியல் நிபுணரான சிக்மண்ட் பிராய்ட் தற்சிந்தனைப்படி மனமானது நனவிலி மனதிலே காணப்படுகின்ற சுய வெளிப்பாடுகளை, உள வடுக்களைக் களைவதற்கான மன ஆற்றுப்படுத்தலைத் தானாக மேற்கொள்ள சில வழிமுறைகளைக் கையாள்வதாகக் கூறுகின்றார். அதாவது ‘ஆழ்மன எண்ணங்கள், நிறைவேறாத ஆசைகள் என்பன பெரும்பாலும் கனவுகளாக வெளிப்படுகின்றன. அதைப் போலவே கற்பனை கொள்ளல், கோபங் கொள்ளல், புறங்கூறல், பொய்கூறல், இழிவு கூறல் போன்ற மொழி வினை வடிவங்களாக வெளிப்படுகின்றன’என்கின்றார்.
இதிலே கோபங் கொள்ளல், புறங்கூறல், இழிவு கூறல் போன்ற மொழித் தாக்கங்களின் வாயிலாகவே மரபுத்தொடர்களும், நிந்தைச் சொற்களும் சமூக மட்டங்களிடையே பெருவாரியாக வக்கிரப் போக்கில் பாவிக்கப்படுகின்றன என்பது உணர்ந்தும் உணராதவை.
உணர்வுநிலை வெளிப்பாட்டில் உளவியல் சிந்தனை :
சங்க இலக்கியங்கள் உயிரோட்டம் வாய்ந்தவை. இவற்றில் உணர்வு என்பதே அத்தகைய செய்யுட்களின் உயிராக நின்றிருப்பதனைக் காணலாம். உணர்வு என்பது மொழிகளைத் தாண்டி அனைத்து உயிர்களுக்கும், மனிதர்களுக்கும் பொதுவானது. மொழிகளைக் கடந்து மனிதனை ஒன்றிணைக்கும் ஆற்றல் உணர்வு நிலைக்கு மட்டுமே உண்டு. தொல்காப்பியர் தனது மெய்ப்பாட்டியலிலே மனிதருக்குள் தோன்றும் அடிப்படை உணர்வுகள் குறித்து உளவியல் ரீதியாகச் சிந்தித்துள்ளமையை அவரது சூத்திரங்களைப் பயில்வதன் மூலம் அறியலாம்.
“நகையே அழுகை இளிவரல் மருட்கை
அச்சம் பெருமிதம் வெகுளி உவகையென்று
அப்பால் எட்டாம் மெய்ப்பாடு என்ப.”
தொல்காப்பியர் கூறும், சிரிப்பு, அழுகை, இளிவரல், மருட்கை, பயம், பெருமிதம், வெகுளி, உவகை என்று கூறப்படுவன எட்டும் மெய்ப்பாடு என வரையறை செய்துள்ளார். அந்தவகையில் உணர்வுக்கும்-தொழிற்பாட்டிற்கும் இடையே காரண காரியத் தொடர்புபடுத்தி உளவியல் ரீதியாக காட்டுகிறார். நகையை முதலில் வைத்ததன் பொருள் “அனைவருக்குமானது”. உவகையை இறுதியில் வைத்ததன் பொருள் “பண்பட்டவனுக்கானது” என்று உளவியல் ரீதியாக தொல்காப்பியர் தனது நூற்பாவில் குறிப்பிட்டுள்ளார். தொல்காப்பியர் கருத்துப்படி, மெய்ப்பாடு என்பது, ஊகித்து உணரும் படி இல்லாமல், நேரடியாக அனுபவத்தில் புலப்படும் படி முதன்மையானதாக, வெளிப்படையாக சொற்பதங்கள் மனித வாழ்வியலை நோக்காகக் கொண்டனவாய் அமைந்துள்ள சிறப்பு தொல்காப்பியரைச் சாரும்.
பிரிவச்சம் குறித்த உளவியல் சிந்தனை :
பிறராலும், பிற பொருளாலும் தோன்றும் அச்ச உணர்வானது எழும் சூழலைத் தொல்காப்பியர்,
“அணங்கே விலங்கே கள்வர்தம் இறையெனப்
பிணங்கல் சாலா அச்சம் நான்கே.”
அணங்கு என்பது தெய்வம் . விலங்கு என்பது சிங்கம் , புலி முதலிய அஞ்சத்தக்க விலங்குகள், கள்வர் என்பார் தீத்தொழில் புரிவார் , இறை எனப்படுவது பெரியோர், தந்தையர், ஆசிரியர், அரசர் முதலானோரைக் குறிக்கும். இந்த நான்கின் காரணமாக ஒருவனுக்கு ஏற்படும் அச்சத்தை உளவியல் நோக்கில் கூறுகிறார்.
அதையே திருவள்ளுவர்,
இன்றும் வருவது கொல்லோ நெருநலும்
கொன்றது போலும் நிரப்பு.
நாள்தோறும் வறுமையால் வாடி துன்புற்ற ஒருவன், “நேற்றுத் துன்புறுத்தி வாட்டிய அந்த வறுமை, இன்றும் என்னிடம் வருமோ? ” என்று அச்சம் கொள்கிறான். அந்த அச்சத்தின் விளைவே இந்தக் குறட்பா.
சமூக மதிப்பிடுகளின் வெளிப்பாட்டில் உளவியல் சிந்தனை :
உளவியல் என்பது ஒருவன் தன்னைத்தானே அளவிடும் கருவி. ஒருவன் தன்னைப் பற்றிச் சிந்தித்ததன் விளைவாகவே உளவியல் பிறந்தது. அந்தவகையில் நன்மை-தீமை, நல்லது-கெட்டது என்ற இருதுருவ நிலையில் உளவியல் சிந்தனை அமைந்துள்ளதனைக் காணலாம்.
நட்பு: உளவியல் சிந்தனைகளின் சமூக மதிப்பீடுகள், ஒழுக்க நியமங்களில் நட்பு என்பது முக்கிய இடத்தினைப் பெறுகின்றது. ஓரு நண்பனைத் தேர்ந்தெடுப்பதிலும், நட்புப் பாராட்டுவதிலும் ஒவ்வொருவருக்கும் இடையில் தனித்துவங்கள் உண்டு. அந்தவகையில் நண்பர்களைத் தெர்ந்தெடுப்பது பற்றியும், நட்புப்பாராட்டும் தன்மை குறித்தும் நற்றிணைச் செய்யுட்கள் இயம்புகின்றன.
“அரிய வாழி தோழி பெரியார்
நாடி நட்பின் அல்லது
நட்டு நடார்தம் ஒட்டியோர் திறத்தே.”
“முந்தை இருந்து நட்டோர் கொடுப்பின்
நஞ்சும் உண்பர் நனிநாகரிகர்”
என்ற பாடல்கள் மூலம் நட்பாராயும் உளவியல் குறித்தும், ஆய்ந்து நட்புக் கொண்டபின் நண்பன் நஞ்சைக் கொடுத்தாலும் அதை மகிழ்வோடு பருகும் நிலையையும் சமூக மதிப்பிட்டு உளவியல் என்றே கொள்ளலாம்.
திருமண பந்தத்தில் நிலைத்து நிற்றல் உளவியல் சிந்தனை:
இன்று திருமணங்கள் சொர்க்கத்கில் நிச்சயிக்கப்பட்டாலும் அவற்றில் அதிகமானவை நீதிமன்றங்களில்தான் முற்றுப் பெறுகின்றன. அந்த வகையிலே திருமணம், குடும்பம் பற்றிய உளவியல் சிந்தனையை பண்டைத் தமிழரிடத்தும் நிலவி இருந்துள்ளமையினைக் காணலாம்.
தலைவன் தலைவியை உண்மையாக அன்பு செய்கிறான். தலைவியும் தலைவனின் பிரிவைத் தாங்க முடியாது துவண்டு போய்விடுகிறாள். இந்நிலையில் தோழி இருவருக்கும் உடன்போக வழிசெய்து வழியனுப்பும் தறுவாயில் குடும்பம் ஒன்றுக்கு வேண்டிய உளவியல்சார் கருத்துக்களை முன்வைக்கிறாள்.
“அண்ணாந்து ஏந்திய வனமுலை தளரினும்
பொன்னேர் மேனி மணியிற் றாழ்ந்த
பிழையா நன்மொழி தேறிய இவட்கே.”
என்று கூறும் நற்றிணைச் செய்யுளிலே தலைவியின் மார்புகள் தளர்ந்து இளமை போய் முதுமை வந்த நிலையிலும், கருங்கூந்தல் நரைகூடிப் போன போதும் உன்னை நம்பி வந்த அவளைக் கைவிடாதே என அறிவுரை கூறிநிற்பது உளவியலின் வெளிப்பாடே எனலாம்.
ஆடவர் ஒழுக்கம் உளவியல் சிந்தனை:
ஒரு ஆணைப்பற்றிய பெண்ணின் மனப்பதிவானது எப்படி இருக்க வேண்டும். எப்படி எல்லாம் இருக்கக் கூடாது என்பதனைப் பெண்ணின் நிலையில் நின்று சிந்தித்துப் பார்த்திருக்கும் உளவியல் வெளிப்பாட்டை நற்றிணையிலே அறியமுடிகின்றது.
“நின்ற சொல்லர் நீடுதோறு இனியர்
என்றும் என்தோள் பரிபுஅறி யலரே…
நறுநுதல் பசத்தல் அஞ்சிச்
சிறுமை உறுபவோ செய்புஅறி யலரே.”
என்று தோழிக்குத் தலைவனின் சிறப்புக்களைக் கூறுவதிலிருந்து ஒருவரைப் பற்றிய புரிதலுக்கு நல்லெண்ண உளவியல் அவசியமாகின்றமை புலனாகின்றது.
அறிவு நிலை வெளிப்பாட்டில் உளவியல் சிந்தனை:
அறிவுசார் உளவியல் சிந்தனைகள் பழந்தமிழரிடையே இருந்துள்ளன. உணர்ச்சி, அறிவு என்னும் இரண்டும் வாழ்க்கைக்கு அடிப்படையாக அமைகின்றன. இந்த இரண்டிற்கும் இடையிலான போராட்டமே வாழ்க்கை.
அறிவு : தலைவி மேலுள்ள காதலினால் தலைவன் பொருள் தேடச் சென்று பாதிப்பொருள் ஈட்டிவிட்டான். அவன் மனமோ திரும்பி அவளிடம் செல்ல நினைக்கிறது. அறிவோ அவளுக்காக மீதிப் பொருளையும் ஈட்டச் சொல்கிறது. அவனோ அறிவு, மனம் என்னும் பலம் வாய்ந்த இரு யானைகளால் இழுக்கப்படும் பழங்கயிற்றைப் போல துன்புறுகிறான்.
“ …களிறுமாறு பற்றிய
தேய்புரி பழங்கயிறு போல
வீவதுகொல் என் வருந்திய உடம்பே?”
என்ற பாடல் மூலம் அறிவு, மனம் பற்றிய நுண்ணிய அறிவு பழந்தமிழரிடத்தே இருந்துள்ளமை தெளிவாகின்றது.
மனப்பக்குவம் குறித்த உளவியல் சிந்தனை :
இயற்கையைத் தன் தாயாக சகோதரியாகப் பார்க்கும் மனநிலை உளவியலின்பாற்படும். இதனைச் சூழல் சார்ந்த உளவியல் பண்பாகக் கொள்ளலாம். ஒரு ஏழு வயதுச் சிறுமி கடற்கரையிலே புன்னைக்காயைக் கொண்டு விளையாடுகிறாள். ஒருவாரம் கழித்து அது முளைத்திருந்ததைக் கண்டு தனது தோட்டத்திலே வைத்து வளர்க்கிறாள். அவளும் வளர மரமும் வளர்ந்தது.அவளும் திருமணம் முடித்து ஒரு குழந்தைக்குத் தாயாகி விடுகிறாள். தனது மகளிடம் புன்னையை சகோதரி என்றே கூறுகிறாள.; மகளும் பெரியவளாகிக் காதலனோடு புன்னை மரத்தடியில் கூடுகிறாள். இருப்பினும் பேசாது நாணி நிற்கிறாள். இதற்குக் காரணம் புன்னையைத் தனது சகோதரியாக எண்ணியதே.
“விளையாடு ஆயமொடு வெண்மணல் அழுத்தி
அம்ம நாணதும் நும்மொடு நகையே”
என்ற அகநாநூற்றுப் பாடலில் ஓரறிவுள்ள மரத்தைத் தன் குழந்தையாகப் பார்த்த தாயையும், சகோதரியாகப் பேணிய மகளையும் காணலாம். இருவரும் உளவியல் சார்ந்த மனப்பக்குவத்திற்குச் சான்றாக அமைகின்றனர்.
தமிழின் சிறப்புக்களைப் பற்றி ஆய்வுகள் பல செய்தமையால் “தமிழ் இமயம்” என்று தமிழ் அறிஞர்களால் போற்றப்பட்ட வ.சுப.மாணிக்கம் அவர்கள் உளவியலின் துணையோடு தமது தமிழ்க்காதல் நூலில் நிரூபித்துள்ளார்.
பெண் குழந்தைக்குக் குழவிப் பருவம் முதலாகக் காலில் அணிவிக்கப்பட்ட சிலம்பு என்ற அணிகலனைத் திருமணத்திற்கு முன் நீக்கப்படும் போது, அச்சடங்கு விழாவாகக் கொண்டாடப்பட்டது. சிலம்பு கழி நோன்பு சடங்கு, இளம் பெண் திருமணமானவள் என்பதைப் பிறர்க்கு உணர்த்திடும்.
பண்டைய நாளில் இளம் பெண்கள் கூந்தலில் மலர் சூடுவது வழக்கம் இல்லை. களவின்போது தலைவன் பெண்ணின் கூந்தலில் பூவைச் சூடியதால் ஏற்பட்ட பூவின் வாசம், அவளைத் தாயிடம் காட்டிக் கொடுப்பதாகச் சங்கப் பாடல் குறிப்பிட்டுள்ளது.
குமரிப் பெண் கூந்தலில் பூவைச் சூடும் உரிமையைத் திருமண நாள் முதலாகப் பெறுகின்றாள். கரணம் என்ற சொல்லின் பின்னர் பொதிந்திருக்கிற பண்டைத் தமிழரின் பண்பாட்டு வாழ்க்கை நெறியைச் சங்கப் பாடல்கள் மூலம் நிறுவியுள்ளனர்.
சங்கப் பிரதிகள் வலியுறுத்துகிற குடும்பம் என்ற நிறுவனத்தில் ஒருவனுக்கு ஒருத்தி என்ற வரையறையைப் பொருட்படுத்தாமல், தன்னியல்பாக வாழ்ந்த சுதந்திரமான பெண்ணை புலமை மரபு, “பரத்தை” என்று குறிப்பிட்டுள்ளது. அவளுடைய பாலியல் விழைவும் தேர்வும் கூட அன்பு வயப்பட்டது தான்.
திருக்குறளில் வள்ளுவன் மனநலம் குறித்து,
இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்
பொருள்சேர் புகழ் புரிந்தார் மாட்டு
உளவியல் ரீதியாக இந்த குறளில் நான்கு புதிர்கள் உள்ளன. இருள் என்றால் என்ன பொருள்? இருவினைகள் யாவை? இறைவன் பொருள்சேர் என்றால் என்ன பொருள்? புகழ் புரிந்தார் மாட்டு என்றால் என்ன பொருள்?
இருள் என்றால் குழப்பம் அல்லது மயக்கம். அதாவது ஒன்றை இன்னொன்று எனப்பொருள் கொள்வது. சற்று இருள் நிறைந்த ஒரு இடத்தில் கிடக்கும் கயிற்றினைப் பாம்பு எனத் தவறுதலாகப் பொருள் கொண்டு விடுகிறோமல்லவா? இவ்வுலக வாழ்க்கை ஒரு பயிற்சிக் களம், இவ்வுலகத்தில் நாம் துய்ப்பன யாவும் பயிற்சிக்கான பொருள்கள். பயிற்சியின் நோக்கம் உயிரை அல்லது ஆன்மாவை இறை உலகில் வசிப்பதற்கு தகுதியானதாக மேம்படுத்துவது. ஏனெனில் இறைவன் ஒருவரே உண்மையான பொருள். இதைப் புரிந்து கொள்ளாமல் இவ்வுலகமும் அதன்பொருள்களும் உண்மையானவை என மயங்கி நிற்றலே இருளாம்.
வேறு விளக்கமும் உரையும்:
இதல்லாமல் ”இறைவன் பொருள்சேர்” என்பதை இறைவனின் எட்டுத் தன்மைகளைச் சார்ந்த என்று பொருள் கொள்ளவும் இடமுள்ளது. அவ்விதம் கொண்டால் இறைவனின் எட்டுக் குணங்களில் மனிதர்கள் தம் வாழ்வில் கடைப்பிடிக்க இயலக்கூடிய, வேண்டுதல் வேண்டாமை இலாதிருத்தல், ஐம்புலன்களான (கண்; காது; மூக்கு; வாய்; மெய்) ஆகியவற்றின் செய்தியை நெறிப்படுத்தி அறவழிப் பயன்பாட்டுக்கு உள்ளாக்குதல் மற்றும் எல்லா உயிரிகளிடத்தும் கருணையுடன் இருத்தல் ஆகியவற்றை தம் வாழ்வில் மேற்கொண்டு வாழ்வோரிடத்தில் இவ்வுலகம்தான் உண்மையானது என்ற மயக்கம் காரணமாகத் சிந்தையிலும், செயலிலும் தோன்றும் தீமைகள் இராது என்கிறார் வள்ளுவர். அப்படி இருக்கும் போது மனநலமும் சிறக்கும்.
பழந்தமிழரிடத்தே உளவியல்சார் சிந்தனைகள் ஒரு துறையாக வளர்ச்சி அடைந்திராத போதும் உளவியல் எண்ணக்கருக்களும், சிந்தனை முயற்சிகளும் இடம்பெற்றிருப்பதனை இலக்கியச் சான்றுகள் மூலம் அறிய முடிகின்றது. நற்றிணைச் செய்யுட்கள் பலவற்றிலும் உளவியல்சார் சிந்தனைச் சிதறல்களையும், மனப்பதிவுகளின் அடையாளங்களையும் கண்டுகொள்ள முடிகிறது. பழந்தமிழரின் வாழ்கையிலும் உளவியல்சார் சிந்தனைகள் இருந்திருக்கின்றமைக்குப் பல அகச் சான்றுகளைக் காட்டமுடியும்.
பழந்தமிழர்களின் உளவியல் சார்ந்த சிந்தனைகளைத் தேடித் தொகுப்பதன் மூலமாக உளநலமும், தமிழ் வளமும் இணைந்தே வழக்கிலிருக்கும் பல்வேறு உளவியல், ஒழுக்கவியல் பிரச்சினைகளுக்கும் தீர்வு காண முடியும்.
தொல்காப்பியம் தொடங்கி, தற்கால இலக்கியம் வரை படைப்பாளிகள் உளவியல் சார்ந்த கருத்துக்களை தொடர்ந்து எழுதி மக்களுக்கு வழிகாட்டி வருகின்றனர். படைப்பு என்பதே ஒரு உளவியல் சார்ந்த இயக்கப்பாடு தான். உளநலமும், தமிழ் வளமும் ஒன்றோடு ஒன்று பின்னிப்பிணைந்ததே.