குழந்தையும் தெய்வமும் ஒன்று என்ற பழமொழி உண்மையானால் குழந்தைகளுக்கு எதிரான செயல்களில் ஈடுபடமாட்டார்கள்.
பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகளில் இருந்து குழந்தைகளை பாதுகாக்க 2012-ம் ஆண்டு இயற்றப்பட்ட ‘போக்சோ’ சட்டம் குறிப்பிடத்தக்கது. அது 18 வயதுக்கு உள்பட்ட ஆண்-பெண் இருபாலருக்கும் பாதுகாப்பு அளிக்கும் பொதுவான சட்டமாகும்.
பிற தண்டனை சட்டங்களை விட போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்து குற்றம் நிரூபிக்கப்பட்டால் தண்டனை மிகக் கடுமையானதாக இருக்கும். குறிப்பாக பாதிக்கப்பட்ட பெண்ணின் புகார் இருக்கும் பட்சத்தில், விசாரணை இல்லாமலேயே முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்ய இந்த சட்டம் அனுமதிக்கிறது. என்றாலும், சட்டங்களால் மட்டுமே குற்றங்களை குறைக்க முடியாது.
பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகிறவர்களில் 7 வயதுக்கு உள்பட்ட சிறுமிகள் அதிகமாக இருக்கிறார்கள். குழந்தைகளின் சின்ன சின்ன ஆசைகளை புரிந்து கொண்டு தன்னுடைய இச்சைக்கு பகடையாக விளையாடும் மனித உருவங்களும் இவ்வுலகில் உண்டு.
தனிக்குடும்பங்களிலுள்ள (Nuclear Family) குழந்தைகளை எளிமையாக பக்கத்து வீட்டிலுள்ளவர்களோ, உறவினர்களோ, அல்லது குழந்தைகள் தினமும் பேசிப் பழகும் நபர்களால் தான் பாலியல் தொந்திரவு வர வாய்ப்பிருக்கிறது என்று எண்ணுகிறோம். ஆனால் கூட்டுக் குடும்பத்தில் (Joint Family) பெரியப்பா, சித்தப்பா, மாமா, தாத்தா போன்ற நெருங்கிய சொந்தங்களாலேயே பாலியல் தொந்திரவுகள் நடந்து கொண்டு தான் இருக்கின்றது.
இவை எல்லாவற்றிற்கும் மகுடம் வைத்தது போல பெற்ற தந்தையாலேயே தொத்திரவுக்கு உட்படுத்தப்படும் குழந்தைகளும் இருக்கிறார்கள்.
ஒரு சில குழந்தைகளிடம் பாடம் கற்பிப்பவர்களே தவறாக நடந்து கொண்டிருப்பதாகவும் ஆய்வறிக்கை மூலம் தெரியவந்துள்ளது.
குழந்தைகள் திருமணம் முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது என்றாலும், சில இடங்களில் குழந்தைகளைத் திருமணம் செய்து, உடல் ரீதியாக துன்புறுத்தப்பட்டு பாதிக்கப்பட்டுள்ளதாக பத்திரிக்கை செய்திகளில் பார்க்கும் போது இப்படியும் நிகழுமா? என்று நெஞ்சம் பதறுகிறது.
வன்முறைகள் இன்றைய காலகட்டத்தில் தான் நடக்கிறதா? என்றால், எல்லா கால கட்டங்களிலும் குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகள் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கின்றது. ஆனால் இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சியும், ஊடகத்துறைகள் மூலமும் உடனுக்குடன் தெரிந்து கொள்வதனால் இன்றைய காலகட்டத்தில் தான் அதிகமாக நிகழ்வது போன்ற பிரம்மையை ஏற்படுத்துகிறது.
#MeToo போன்ற சமூக வலைதளங்களில், “நானும் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டேன்” என்ற அர்த்தத்தோடு பகிரப்படும் ஒரு வாக்கியம். தங்களை பாலியல் ரீதியாக சீண்டிய ஆண்களின் முகத்திரையை விலக்கும் வகையில் பெண்கள் முன்னெடுத்த ஒரு இணைய போராட்டம். இதன் மூலமும் பல பாலியல் வன்முறைகள் வெளிவந்தன.
பல குழந்தைகளுக்கு தங்கள் குழந்தைப் பருவத்தில் தவறாக பயன்படுத்தப்பட்டிருக்கிறோம் என்று அறிப்படாமலேயே, யாரிடமும் சொல்லவும் தெரியாமல், அதனைப் பற்றி அறிய ஆரப்பிக்கும் போது தான் தெரிந்து கொள்கிறார்கள், தாங்கள் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்டிருப்பதை.
இது போன்ற வன்முறைக்கு ஆளான ஆண் மற்றும் பெண் குழந்தைகள் உளவியல் ரீதியான பல பிரச்சினைகளை தனக்குத் தானாகவும், குடும்பத்தாருக்கும், சமூகத்திற்கும் ஏற்படுத்தும் வாய்ப்புகள் அதிகம்.
தாம்சன் ராய்ட்டர்ஸ் அறக்கட்டளை 2018ல் நடத்திய ஆய்வில், மூன்று காரணங்களுக்காக பெண்கள் வாழ தகுதியற்ற நாடுகளில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. அவை பாலியல் வன்முறை, கலாச்சாரம் என்ற பெயரில் அவர்கள் மீது நடத்தப்படும் வன்முறை மற்றும் பெண்கள் கடத்தல், பெண் கொத்தடிமை மற்றும் நீதி நிராகரிக்கப்படுவது போன்ற காரணங்களுக்காக பெண்கள் வாழ தகுதியற்ற நாடுகளின் பட்டியலில் இந்தியா முதலிடத்தில் உள்ளது.
அதே தாம்ஸன் ராய்ட்டர்ஸ் அறக்கட்டளை 2011ல், 7 ஆண்டுகளுக்கு முன்பு நடத்திய ஆய்வில், இந்தியா நான்காவது இடத்தில் இருந்தது.
உலகின் வளர்ந்து வரும் நாடுகளில் முதலிடத்தில் இருக்கும் நாடான இந்தியா நம் பெண்களுக்கு பாதுகாப்பான நாடாக இல்லாமல் போனது துரதிர்ஷ்டவசமானது மட்டுமல்ல நாம் அனைவரும் வெட்கப்பட வேண்டிய ஒரு விஷயமாகும்.
ஒவ்வொரு 29 நிமிடங்களுக்கும் ஒரு பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்படுகிறார், ஒவ்வொரு 77 நிமிடங்களுக்கும் ஒரு வரதட்சணை மரணம் நிகழ்கிறது. மேலும் கணவர் அல்லது அவர்களது உறவினர்களால் ஒவ்வொரு ஒன்பது நிமிடத்திற்கும் ஒரு பெண் கொடுமைப்படுத்தப்படுகிறாள். பெண் சிசுக்கொலை மற்றும் கருவிலேயே பெண் குழந்தைகளை கொல்வது போன்ற செயல்களால் கடந்த நூற்றாண்டில் மட்டும் 50 மில்லியன் பெண் குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளனர். பெண்கள் மற்றும் குழந்தைகள் கடத்தலில் இந்தியா முக்கிய நாடாக உள்ளது, இங்கு 44.5 சதவீத பெண்களுக்கு 18 வயதிற்கு முன்பே திருமணம் செய்து வைக்கப்படுகிறது.
70% பெண்கள் வன்முறையால் பாதிக்கப்பட்டவர்கள், கற்பழிப்பு, திருமண கற்பழிப்பு, பாலியல் வன்கொடுமை மற்றும் துன்புறுத்தல், கலாச்சார மற்றும் பாரம்பரிய நடைமுறைகள் மற்றும் கட்டாய உழைப்பு, பாலியல் அடிமைத்தனம் போன்றவற்றால் பாதிக்கப்படுகின்றனர்.
குழந்தைகளை குழந்தைகளாகப் பாருங்கள். எல்லா குழந்தைகளையும் நம் குழந்தைகளாக எண்ண வேண்டும். குழந்தைகளுக்கு எதிரான அனைத்து வன்முறைகளையும் முடிவுக்குக் கொண்டுவர வேண்டும்.
உடல் பற்றிய சந்தேகம் இரண்டு வயதில் இருந்தே நமக்கு சந்தேகம் எழுகிறது. ஆணுக்கும் சரி, பெண்ணுக்கும் சரி. சின்ன சின்ன சந்தேகங்கள் தான். அது கூட வளரும் குழந்தைகளுக்கு மிகப்பெரிய குழப்பத்தை ஏற்படுத்தும். இதை முறையாக சொல்லித்தர வேண்டும். அதன் வழியாக உளவியல் மற்றும் உடல் சார்ந்த சிக்கல்களை ஓரளவிற்கு தடுக்கலாம்.
10, 12 வயதில் ஆண்/பெண் குழந்தைகளுக்கு பாலியல் உறவைப் பற்றிய ஆர்வம் தோன்றுகிறது. அவர்களாக ஊடகம், சினிமா, இணையதளத்தில் தவறாகப் புரிந்துக் கொள்வதற்கு முன் சரியாக ஆசிரியர்களும், பெற்றோரும் புரிய வைத்தல் நலம்.
10, 12 வயதில் தான், அதுநாள் வரை இயல்பாக விளையாடிக் கொண்டிருந்த ஆணும் பெண்ணும் ஒரு இடைவெளியை ஏற்படுத்துவார்கள். அதுவே அவர்களுக்குள் சில கேள்விகளை ஏற்படுத்தும். அந்த கேள்விக்கு அவர்களே விடையைத் தேட முயற்சிக்கும் போதுதான் உறவுகள் பற்றிய குழப்பமும் பிரச்சனையும் ஏற்படுகிறது.
மேலும், பாலியல் குறித்த சரியான வழிகாட்டுதல் இன்றி தவறாக அதைப்பற்றிக் கற்றுக்கொள்ள ஆரம்பிப்பார்கள். சரியாக அனைத்தையும் சொல்லித்தரும் அளவுக்கு பெற்றோர்கள் இல்லை. அவர்கள் பலவற்றை மறைத்து வைக்கத்தான் நினைக்கிறார்கள். வீட்டில், டிவி பார்க்கும் போது ஒரு முத்தக்காட்சி வந்த உடனேயே சேனலை மாத்துகிறோம், அது என்னவென்று தெரிந்து கொள்ளும் ஆர்வம் ஏற்படுகிறது. ஆசிரியர்களும் கூட, இனப்பெருக்க முறை பற்றி பாடம் வந்தால் சொல்லித் தர தயங்குகிறார்கள். தகுந்த ஆசிரியர்கள், முறையான பாடத்திட்டம், வழிகாட்டுதல் இருந்தால் பாலியல் குற்றங்கள் ஓரளவிற்கு குறைப்பதற்கு வழிவகுக்கும். குழந்தைகள் தங்களை எப்படி பாத்துகாத்துக் கொள்ள வேண்டும் என்பதுவும் புரிய ஆரம்பிக்கும்.
பாலியல் ரீதியாக சிதைக்கப்படும் போது, பெண் சுயஒழுக்கத்தைக் கேள்விக்குறியாக்குவதுவும் இங்கு பாலியல் ரீதியான தாக்குதல்களுக்கு வழிவகுக்கிறது.
சமூகமும், பெற்றோர்களும், யார் குழந்தையாக இருந்தாலும், அவர்கள் மேல் ஒரு கன் வைத்துக் கொண்டிருந்தால், கொடுமைகள் குறைக்கப்படலாம். சந்தேகத்திற்குரிய நபர்களை கண்காணிப்பதுவும், குழந்தைகள் அவர்களிடம் நெருங்காமல் எச்சரிப்பதும், தவறு செய்பவர்கள் மனநலம் மாற வாய்ப்புள்ளது.
அனைத்து குற்றங்களுக்கும் மகுடம் வைத்தது போல், இன்றைய காலகட்டத்தில் நிகழும் சைபர் குற்றங்கள். சைபர் குற்றப்பிரிவு, துரிதமாக இயங்கி, குற்றவாளிகளுக்கு தண்டனையளிக்கும் அளவிற்கு பெண்கள் மீது நிகழ்த்தப்படும் சைபர் குற்றங்களில் ஆர்வம் காட்டப்பட வேண்டும்.
ஒருவன் ஒரு பெண்ணை பாலியல் ரீதியாக தவறாகப் பேசுவதற்கோ, எழுதுவதற்கோ பயப்படும் அளவிற்குச் சட்டங்கள் கடுமையாக்கப்பட வேண்டும். போலிக் கணக்குகளை முடக்குவதில் அரசு தீவிரம் காட்டினால் பெண்கள் மீது நிகழ்த்தப்படும் சைபர் குற்றங்கள் பெருமளவில் குறையும்.
பெண்களின் சுதந்திரமும் பாதுகாப்பும் சமூகவலை தளங்களிலேயே கேள்விக்குள்ளாகும் நிலையில் பெண்களுக்குப் பாதுகாப்பற்ற நாடுகளில் முதலிடத்தில் இந்தியா இருப்பதில் வியப்பேதும் இல்லை.