வேலையில்லா திண்டாட்டம்…
நேற்றும் இருந்தது, இன்றும் இருக்கிறது, நாளையும் இருக்கத்தான் செய்யும்.
உலகையே ஆட்டிப்படைக்கும் கொரோனா வைரஸ், உலக நாடுகள் மீது கிருமித் தொற்று தாக்குதலை மட்டுமின்றி, அரசாலும், தனிமனிதர்களாலும் தாங்கிக் கொள்ள முடியாத, வரலாறு காணாத பொருளாதாரத் தாக்குதலையும் நடத்தியிருக்கிறது.
இந்தச் சூழலில், இந்தியாவில் மட்டுமின்றி எல்லா நாடுகளிலும் வேலையில்லா திண்டாட்டம் நிலவுகிறது.
வேலையில்லா திண்டாட்டம் தொடர்பாக ஐ.நாவின் சர்வதேச தொழிலாளர் அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், “உலக அளவில் முறைசாராத் தொழிலாளர்கள் 200 கோடி பேர் உள்ளனர். நைஜீரியா, பிரேசில் மற்றும் இந்தியாவில்தான் உலகிலேயே அதிக முறைசாராத் தொழிலாளர்கள் உள்ளனர். இதில் இந்தியாவில் மட்டும் 40 கோடி பேர் இருக்கிறார்கள்.
இவர்களில் 90 சதவீதத்தினருக்கு மேல் இ.எஸ்.ஐ., பி.எஃப் போன்ற எந்தவித தொழிலாளர் நல உதவிகளும் இல்லை. பணி நிரந்தரம் என்ற உத்தரவாதமும் கிடையாது. இந்தச் சூழலில் வேலையில்லாமல் வீட்டில் இவர்களை அடைத்துவிட்டால் வருமானத்திற்கு என்ன செய்வார்கள்?
இந்த கொரோனா பாதிப்பு, இரண்டாம் உலகப் போருக்கு பின்னால் ஏற்பட்ட மிகப்பெரிய உலகப் பேரழிவாக அமைந்துள்ளது. உலகளவில் இந்த ஆண்டின் இரண்டாவது காலாண்டில், 19.5 கோடி முழுநேர வேலைகள் அல்லது வேலைநேரத்தின் 6.7 சதவீதம் அழிக்கப்படும்” எனத் தெரிவித்துள்ளனர்.
ஒரு செய்தியில், உத்திரப்பிரதேசம் திரும்பும் புலம்பெயர் தொழிலாளர்களின் நலனுக்காக ”புலம்பெயர் தொழிலாளர்கள் ஆணையம்” அமைக்கப்பட்டு, தொழிலாளர்களின் வேலைவாய்ப்பிற்கு உத்தரவாதம் அளிக்க நடவடிக்கை எடுக்கப்படும். குறைந்தபட்ச வேலை ஆதாரம் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு அளிக்கப்படும் என்று முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார். இவர்களுக்கு காப்பீடு உள்ளிட்ட வசதிகள் செய்து தரப்படும் என்றும் கூறினார்.
மேலும், பிற மாநிலங்களுக்கு பல்வேறு துறை சார்ந்த வேலைகளுக்கு தொழிலாளர்கள் தேவைப்படும் பட்சத்தில் அவர்கள் எங்கள் அரசின் புலம்பெயர் தொழிலாளர்கள் ஆணையத்தை அணுக வேண்டும். இதன்மூலம் பிற மாநிலங்களில் உத்தரப் பிரதேச தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படாமல் இருக்கும் வகையில் கண்காணிக்கப்படும். குறிப்பாக ஊரடங்கு காலத்தில் நிகழ்வுகள் எதிர்காலத்தில் நடைபெறாமல் இருக்க ஆணையம் உறுதுணையாக இருக்கும் என்று முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் நம்பிக்கை தெரிவித்தார். தொழிலாளர்கள் நலன் பாதுகாக்கப் பயன்படுமெனில், இதனை பிற மாநிலங்களும் பின்பற்றலாம்.
கல்லூரி படிப்பு முடித்து, சரியான வேலை கிடைக்காமல், எல்லா கம்பெனிக்கும் ரெஸ்யூம் அனுப்புவதோடு, படிப்பிற்கு ஏற்ற வேலை கிடைப்பதில்லை. மற்றொரு புறம், யுபி.எஸ்.சி, டி.என்.பி.எஸ்.சி, வங்கி, ரயில்வே, போன்ற போட்டித்தேர்வுக்கு தயாராகி வருகிறார்கள் ஏராளமான இளைஞர்கள்.
இப்படிப்பட்ட சூழலில், கடந்த பிப்ரவரி மாதம் இறுதியில் இந்திய பொருளாதார கண்காணிப்பு மையம் ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தது. அதன்படி, 2020 பிப்ரவரி மாதத்தில் மட்டும் வேலையில்லா திண்டாட்டம் 7.76 சதவீதம் அதிகரித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இந்திய பொருளாதார கண்காணிப்பு மையம் என்ற அமைப்பின் சிந்தனை குழு பல ஆய்வுகளை தொடர்ந்து நடத்தி வருகிறது. இந்த ஆய்வுகள் எல்லாம் அரசாங்கங்கள் உள்பட எல்லோராலும் கவனத்தில் எடுத்துக் கொள்ளப்படுகிறது. இந்த அமைப்பு இப்போது வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில், ‘ஊரடங்கு அமல்படுத்தப்பட்டப்பிறகு, இந்தியாவில் 12 கோடியே 20 லட்சம் பேர் வேலைவாய்ப்பை இழந்து இருக்கிறார்கள்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தினக்கூலி வாங்கும் தொழிலாளர்களும், சிறு தொழில், வர்த்தக நிறுவனங்களில் பணியாற்றுபவர்களும் இந்த ஊரடங்கு நேரத்தில் பாதிப்புக்குள்ளாகி இருக்கிறார்கள். இன்னும் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டால் பாதிப்பு ரொம்ப மோசமாக இருக்கும் என்று அந்த ஆய்வு தெரிவிக்கிறது.
தமிழ்நாட்டைப் பொறுத்தமட்டில், இந்த ஊரடங்கு நேரத்தில் நாட்டிலேயே அதிகமாக வேலையில்லா நிலைமை உருவாகி இருக்கிறது. 49.8 சதவீதம் பேர் வேலையில்லாமல் இருக்கிறார்கள். கடந்த 2019-ம் ஆண்டு மே மாதத்தில் 0.9 சதவீதமாக இருந்த வேலையில்லா திண்டாட்டம், இப்போது 49.8 சதவீதமாக உயர்ந்திருப்பது மிகுந்த கவலை அளிக்கும் ஒன்றாகும்.
இன்ஜியரிங், பாலிடெக்னிக், ஐடிஐ மற்றும் கலை அறிவியல் கல்லூரிகளில் படித்து முடித்து, ஆண்டுதோறும் பல்லாயிரக்கணக்கானோர் வெளியேறி கொண்டு இருக்கின்றனர். ஆனால், அந்த அளவுக்கு வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படவில்லை. ஐடி உள்ளிட்ட தனியார் கம்பெனிகள் கல்லூரிக்கு சென்று நேர்முகத்தேர்வு நடத்தி, தேர்வு செய்வோர் எண்ணிக்கை 10 சதவீதத்தை தாண்டுவது இல்லை.
பரிணாம வளர்ச்சிக்கு ஏற்ப புதிய தொழில் உருவாக தொழிற்பூங்கா, தொழிற்பேட்டைகள் உருவாகியும் பெரும்பாலும் காலியாகவே கிடக்கின்றன.
தமிழகத்தில் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து காத்திருப்போர் வயது வாரியாக 18 வயது முதல் 56 வயதுக்கு மேற்பட்டோர் அதிகம் உள்ளனர். பதிவு செய்துள்ள 73 லட்சம் பேரில் 15 லட்சம் பேருக்கு தனியார் நிறுவனங்களில் வேலை கிடைத்துள்ளது என அரசு புள்ளிவிவரம் அளித்துள்ளது.
சுய தொழிலை ஊக்குவிக்கவும், விவசாயிகள் நேரடியாக சந்தையில் பொருட்களை விற்க அனுமதிக்க வேண்டும் அப்பொழுது அவர்களுக்கு தங்களுடைய விளை பொருள்களுக்கு கூடுதல் விலை பெற வாய்ப்பு உள்ளது.
உற்பத்தியாளர்கள், குறுந்தொழில், சிறுதொழில், நடுத்தரத் தொழில் வெளிநாட்டு நேரடி முதலீடு ஆகியவை தொடர்பாக புதிய கொள்கைகளை வகுத்து அமல் செய்வதை விட, இந்திய மக்களுக்காக கொள்கைகளை வகுத்து அமுல் செய்வது பொருத்தமானதாக அமையும் கங்கோபாத்யாய் கூறியுள்ளார்.
பொருளாதார மேம்பாடுக்கும், வேலை வாய்ப்புக்கும் முக்கியமாக தேவை தொழில் வளர்ச்சி. புதிய தொழில் உருவாக கட்டமைப்பு வசதிகள் தேவை. அதனை அரசு முன்னின்று செயல்படுத்தும் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.
வேலையில்லாமல் இளைஞர்கள் வாழ்வில் தவறான திசைமாற்றம் ஏற்படுகிறது. இதற்கு தீர்வு காண தவறினால் ஆண்டுதோறும், பெரும்பாலான இளைஞர்களின் கதி என்னாகும்?”
வேலையில்லாத் திண்டாட்டம் என்ற ஒன்றை ஒழிக்க முடியாது என்றாலும், குறைக்க முடியும். அரசு தீர்க்கமான நடவடிக்கைகளை எடுத்தால் மட்டுமே, வரும் ஆண்டுகளில் வேலையின்மை விகிதம் சிறிய குறையுமே ஒழிய, பெரிய அளவில் குறைய வாய்ப்பில்லை என்று நிபுணர்களும் பொருளியலாளர்களும் கருதுகின்றனர்.
– நெல்லை உலகம்மாள்